பணம் பறிக்க ஊராட்சி துணைத்தலைவர் செய்த சதி thirupathur crime| business man abduct
பணம் பறிக்க ஊராட்சி துணைத்தலைவர் செய்த சதி thirupathur crime| business man abduct திருப்பத்தூர், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி நடுவூரை சேர்ந்தவர் தியாகராஜன். தொழிலதிபரான சன் பீடி உற்பத்தியாளர் யுவராஜின் மகன். கடந்த 23ம் தேதி லைசன்ஸ் புதுப்பிக்க தியாகராஜன் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல் அவரை வழி மறித்து கடத்தியது. லக்கி நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்தனர். 1 கோடி ரூபாய் பணம் கேட்டு சரமாரியாக அடித்து, உடைத்து சித்ரவதை செய்தனர். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தியாராஜன் கதறியும் அந்த கும்பல் விடாமல் தாக்கியது. அடிதாங்க முடியாத அவர், 12 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார். மச்சான் அரவிந்தனுக்கு போன் செய்து தரச்சொல்லி பேசிய தியாகராஜன், விஷயத்தை சொல்லி, வீட்டில் இருந்து 12 லட்சம் ரூபாயை வாங்கி வரும்படி கூறியுள்ளார். பணம் கொண்டு வந்த அரவிந்தனை, தருமபுரி மேம்பாலம் அருகே வரச்சொன்ன கடத்தல் கும்பல், போலீசுக்கு போக கூடாது என மிரட்டியது. கடத்தல் கும்பல் சொன்ன இடத்திற்கு அரவிந்தன் பணத்தை கொண்டுவர, அதை பெற்றுக்கொண்டு கும்பல் பறந்தது. தியாகராஜனை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றனர். தாக்கப்பட்டு காயமடைந்திருந்த தியாகராஜன், ஆட்டோ பிடித்து சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதன் பின்பே குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்து வந்தனர். தியாகராஜன் தந்தை யுவராஜ் கந்திலி போலீசில் புகார் கொடுத்தார். தனிப்படை போலீசார் விசாரித்தனர். பணம் கொண்டுபோய் கொடுத்த மச்சான் அரவிந்தன் மீது சந்தேகப்பட்டு விசாரித்ததில், இந்த கடத்தலை நடத்தியதே அவர் தான் என்பது தெரிந்தது. அரவிந்தன், பொன்னேரி ஊராட்சி துணை தலைவராக இருக்கிறார். இவரது தங்கை அகிலாவின் கணவர்தான் தியாகராஜன். தொழிலதிபர் மகன் என்பதால் தியாகராஜனை கடத்தி 1 கோடி ரூபாய் பறிக்க திட்டமிட்டார். இந்த கடத்தலுக்கு அரவிந்தனின் நண்பரும், தமிழக வெற்றி கழக மாவட்ட மாணவர் அணி தலைவருமான சந்தோஷ் கூட்டு சேர்ந்தார். இருவரும் சேர்ந்து கடத்தல் கும்பலை தயார் செய்தனர். அதில், பாஜ வெளிநாட்டு வாழ் பிரிவு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வீரமணிகண்டனும் ஒருவர். இவரது மாமனாரின் பண்ணை வீட்டில்தான் கடத்தப்பட்ட தியாகராஜன் அடைத்து வைக்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட அரவிந்தன், சந்தோஷ், வீரமணிகண்டன், தினகரன், அஜித்குமார், விஷ்வா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய சிலரை தேடி வருகின்றனர். நல்லவன் போல கூடவே இருந்த மச்சானே, கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரிந்து தியாகராஜனும் அவரது குடும்பத்தினரும் நொந்துக்கொண்டனர்.