கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்ட ஸ்டாலின்! CM Stalin | DMK | Thirumavalavan | VCK | ADMK
கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்ட ஸ்டாலின்! CM Stalin | DMK | Thirumavalavan | VCK | ADMK காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்ட திருமாவளவன், அ.தி.மு.க.வும் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். இது தி.மு.க.வினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆட்சியில் பங்கு பற்றி, சமீபத்தில் திருமாவளவன் பேசியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த திருமாவளவன், ஆட்சியில் பங்கு என்பதை நீண்ட காலமாகவே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதையே இப்போதும் சொல்கிறோம், என்றார். இந்தச் சூழலில், ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சந்தித்த மூத்த தலைவர்கள் சிலர், திருமாவளவன் தற்போது பேசுவதற்கு, எடப்பாடி பழனிசாமியின் துாண்டுதல் மற்றும் காய் நகர்த்தல்களே காரணம் என்று புகார் கூறியுள்ளனர். அவர்கள் கூறியவற்றை எல்லாம், கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், தற்போது திருமாவளவனை சீண்ட வேண்டாம்; அமைதியாக இருங்கள்; கூட்டணியில் குழப்பம் வராமல், அவரை அழைத்து பேசுங்கள் என, வாய்ப்பூட்டு போட்டுள்ளார். இந்த விவகாரத்தில், ஸ்டாலினிடம் தி.மு.க மூத்த தலைவர்கள் கூறியது பற்றி, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மது ஒழிப்பு மாநாடு நடத்தினால், அது, தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, இந்த காரியத்தில் திருமாவளவன் இறங்கி உள்ளார். மது ஒழிப்புக்கு எதிராக, தற்போது தி.மு.க.வால் பேசவும் முடியாது; ஆதரிக்கவும் முடியாது. அப்படியொரு இக்கட்டை தி.மு.க.வுக்கு ஏற்படுத்துவது தான், திருமாவளவன் மற்றும் பழனிசாமியின் திட்டம். அவர்கள் சொல்லியதை பொறுமையாக கேட்ட ஸ்டாலின், நீங்கள் சொல்வது தற்போதைய சூழ்நிலைக்கும், தி.மு.க.வுக்கு சரிவராது; அது ஏற்புடையதும் அல்ல. வி.சி. கட்சி நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர்கள் வாயிலாக, திருமாவளவனை அழைத்து வாருங்கள். அவரிடம் பேசிக் கொள்ளலாம் என்று, பதில் அளித்துள்ளார். தி.மு.க கூட்டணியை வலுவிழக்கச் செய்ய எதிர்க்கட்சியினர் திட்டமிடுகின்றனர். திருமாவளவனுக்கு எதிராக சர்ச்சையாக பேசி, அவர்கள் விரித்திருக்கும் வலையில், தி.மு.க.வினர் சிக்கி கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தை கவனமாக அணுக வேண்டும் என்று கூறி, வாய்ப்பூட்டும் போட்டுள்ளார் ஸ்டாலின். இதன் பிறகே, அமைச்சர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் அமைதியாகினர், என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.