இஸ்ரேஸ் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்: போர் பதட்டம் netanyahu| Iran| iran attacks israel
இஸ்ரேஸ் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்: போர் பதட்டம் netanyahu| Iran| iran attacks israel பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ஆயுத குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் ஓராண்டாக சண்டை நடந்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா குழு இஸ்ரேலை தாக்கியது. ஹமாசை ஓரளவு ஒடுக்கிய இஸ்ரேல், ஹிஸ்புல்லா மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அதன் முக்கிய தலைவர்கள், தளபதிகள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முதல் லெபனான் எல்லைக்குள் தரைவழியாக புகுந்து ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தாக்கியது. இச்சூழலில், ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களின் பின்னணியில் செயல்படும் ஈரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஈரான் 400க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களின் புனித தளமான ஜெருசலேமில் உள்ள பழைய நகரத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு தகுந்த பதிலடி தருவோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. குண்டுகள் விழும் இடங்களில் உள்ள இஸ்ரேலியர்கள் பதுங்கு குழிகளில் சென்று பாதுகாப்பாக இருக்கும் படி செல்போன், டிவி மூலம் இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியது. ஈரான் தாக்குதல் பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரான் பெரிய தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. உலகிலேயே மிகவும் நவீனமான இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடித்து விட்டது என நெதன்யாஹு கூறினார். முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான், இஸ்ரேலை எச்சரித்து இருந்தார். ஈரான் மக்களின் நலன் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. போரை ஈரான் விரும்பவில்லை என்பதை இஸ்ரேல் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடன் மோத வேண்டாம். அதே சமயம் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் ஈரான் வலிமையாக எதிர்கொள்ளும் என்று பதிவிட்டு இருந்தார்.