கிருஷ்ணகிரியை உலுக்கிய வெடி விபத்தின் பகீர் பின்னணி | Pochampalli Accident | Pochampalli Blast
கிருஷ்ணகிரியை உலுக்கிய வெடி விபத்தின் பகீர் பின்னணி | Pochampalli Accident | Pochampalli Blast கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வடமலம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், வயது 42. வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், சரவணன், அனுஸ்குமார் அங்கே வேலை செய்கின்றனர். திங்களன்று மாலை 7 மணியளவில் வெல்டிங் பட்டறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்த போது வெல்டிங் பட்டறை உரிமையாளர் ஜெய்சங்கர் உட்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் சிதறி கிடந்தனர். அவர்களை மீட்ட உள்ளூர் மக்கள் ஆம்புலன்ஸ்சில் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்சங்கர் ஆஸ்பிடல் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். பிரகாஷ், சரவணன், அனுஸ்குமார் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை ஆய்வு நடத்தினார். ஒரு இரும்பு பெட்டியால் தான் இவ்வளவு பெரிய வெடிப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு நடப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன் டூவிலரில் வந்த 2 பேர் இரும்பு பெட்டியை கொடுத்து ஓட்டை போட்டு தரும்படி கூறி சென்றுள்ளனர். அது டிராக்டரில் பொருத்தக்கூடிய பெட்டியாகும். டிரில்லிங் மெசின் உதவியுடன் ஜெய்சங்கர் இரும்பு பெட்டியில் ஓட்டை போட்டபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி இருக்கிறது. வெடித்து சிதறிய இரும்பு பெட்டியின் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஜெலட்டின் துகள் இருப்பது தெரியவந்துள்ளது. டிராக்டரில் பொருத்தக்கூடிய அந்த இரும்பு பெட்டி ஜெலட்டின் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வருகிறது. அதில் ஜெலட்டின் குச்சி இருப்பது தெரியாமல் வெல்டிங் பட்டறையில் ஓட்டை போட கொடுக்கப்பட்டுள்ளது. பெட்டியை கொடுத்து சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. ஜெலட்டின் பயன்படுத்த அனுமதி பெறப்பட்டதா? இல்லை முறைகேடு நடந்துள்ளதா எனவும் விசாரிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த போது அந்த தெரு வழியாக நடந்து சென்ற ஒருவர் மீது வெடித்த பாகங்கள் சிதறி இருக்கிறது. அவரும் இப்போது லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.