ஒரே நாடு ஒரே தேர்தல் 3ல் 2 பங்கு ஓட்டு தேவை
ஒரே நாடு ஒரே தேர்தல் 3ல் 2 பங்கு ஓட்டு தேவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் லோக்சபாவில் தாக்கல் செய்ய முன்வந்தார். மசோவை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஓட்டெடுப்பு நடந்தது. விதிகளின்படி சபையில் எளிய மெஜாரிட்டி கிடைத்ததால் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஓட்டெடுப்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 பேரும் எதிராக 198 பேரும் ஓட்டு போட்டனர். ஆரம்ப கட்டத்திலேயே மசோதாவுக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் எம்பிக்கள் கூறுகின்றனர். எம்பி மாணிக்கம் தாகூர் கூறும்போது, இன்றைய கூட்டத்தில் 461 பேர் இருந்தனர். மெஜாரிட்டிக்கு 3ல் 2 பங்கு அதாவது 307 தேவைப்பட்டது. ஆனால், முழு மெஜாரிட்டியை அரசு பெற தவறிவிட்டது என்றார். எம்பி சசிதாரூர் கூறும்போது, அரசுக்கு அவர்கள் தரப்பில் பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது. மசோதவை பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதற்கான மெஜாரிட்டி அவர்ளிடம் இருந்தது. ஆனால், லோக்சபாவில் மசோதா நிறைவேற வேண்டுமானால், சபையில் மூன்றில் 2 பங்கு ஓட்டுகள் தேவை. அது அவர்களுக்கு இல்லை என்றார். தற்போதைய கணக்குப்படி, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 293 எம்பிக்கள் உள்ளனர். இண்டி கூட்டணியில் 234 எம்பிக்கள் உள்ளனர். சபையில் முழு பலத்துடன் இருந்தாலும், மசோதாவை நிறைவேற்ற பாஜவுக்கு 3ல் 2 பங்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறார்கள் எதிர்கட்சி எம்பிக்கள். கூட்டணிக்கு வெளியே இருக்கும் எம்பிக்களின் ஆதரவை பாஜ பெற வேண்டி இருக்கும். அதிலும் கூட ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 4 எம்பிக்கள், அகாலிதளத்தின் 1 எம்பியின் ஆதரவை மட்டுமே பெற முடியும். அவர்களும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துதான் உள்ளனர். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா லோக்சபாவில் நிறைவேறுவது சாத்தியமில்லை என்கிறனர் எதிர்கட்சியினர். இதனிடையே இன்று ஓட்டெடுப்பில் 20க்கு மேற்பட்ட பாஜ எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை அவர்களிடம் விளக்கம் கேட்டு பாஜ நோட்டீஸ் அனுப்ப உள்ளது.