ரஷ்யாவை மிரள விட்ட உக்ரைன் ட்ரோன் அட்டாக் | Russia vs Ukraine | Ukraine drone attack video | kazan
ரஷ்யாவை மிரள விட்ட உக்ரைன் ட்ரோன் அட்டாக் | Russia vs Ukraine | Ukraine drone attack video | kazan 1000 நாட்களுக்கு மேலாக நடக்கும் ரஷ்யா, உக்ரைன் போர் இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உக்ரைனின் 20 சதவீதம் பகுதியை ரஷ்யா பிடித்து விட்டது. பதிலுக்கு ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் ஒரு பகுதியை ஆகஸ்ட் மாதம் உக்ரைன் ராணுவம் கைப்பற்றியதால் போர் தீவிரம் அடைந்தது. இழந்த பகுதியை மீட்க ரஷ்யா சரமாரியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. சக்தி வாய்ந்த ரஷ்யாவுடன் உக்ரைனும் சளைக்காமல் சண்டை செய்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவை திருப்பி அடிக்கிறது. ஏற்கனவே குர்ஷ்க்கின் ஒரு பகுதியை கைப்பற்றி ரஷ்யாவை அதிர்ச்சியில் மூழ்கடித்த உக்ரைன், சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் அணு மற்றும் ரசாயன படையின் தளபதியையே கொலை செய்து திடுக்கிட வைத்தது. இதற்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க ரஷ்யா தாயாராகி வரும் நிலையில், அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் மாடலில் ரஷ்யாவில் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது உக்ரைன். தங்கள் எல்லையில் இருந்து 1000 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள ரஷ்யாவின் கசான் நகரை நோக்கி உக்ரைன் ட்ரோன்களை ஏவி விட்டது. அதில் ஒரு ட்ரோன் கசான் நகரில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு மீது மோதி வெடித்தது. அதே நகரில் உள்ள இன்னொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் இதே மாடலில் ஒரு ட்ரோன் மோதி வெடித்தது. இதில் இரண்டு கட்டடங்களும் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தன. பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் குடியிருப்புகளில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரஷ்யா கூறி உள்ளது. இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதல் மாடலில் நடந்த இந்த சம்பவம் மொத்த ரஷ்யாவையும் அதிர வைத்தது. பாதுகாப்பு கருதி கசான் மற்றும் பக்கத்தில் உள்ள 2 ஏர்போர்ட்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. மக்களை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியது. தாக்குதல் நடத்திய 2 ட்ரோன்களை தவிர 6 ட்ரோன்களை வானத்திலேயே சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா கூறி இருக்கிறது. ரஷ்ய படை தளபதியை உக்ரைன் கொலை செய்ததை அடுத்து 65 ஏவுகணை, ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இருந்தது. இதில் பல கட்டுமானங்கள் சேதம் அடைந்தன. ஆனால் உயிரிழப்பு இல்லை என்று உக்ரைன் சொன்னது. இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்கா தந்த ஏவுகணையை வைத்து ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 15க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து தான் இப்போது ட்ரோன் அட்டாக் நடந்து இருக்கிறது. தொடர்ந்து உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரம் அடைந்து வருவதால் இருநாட்டிலும் பதற்றம் நீடிக்கிறது.