சந்தேகம் இருப்பதால் ஏடிஜிபி மீதான நடவடிக்கை தொடரும்: அரசு வாதம்
சந்தேகம் இருப்பதால் ஏடிஜிபி மீதான நடவடிக்கை தொடரும்: அரசு வாதம் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவன் கடத்தப்பட்டான். இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூஜை ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமின் காரில் சிறுவன் கடத்தப்பட்டதால், அவருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்யவும், கைது செய்யவும் நீதிபதி உத்தரவிட்டது. இச்சூழலில், சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் ஏடிஜிபி ஜெயராம் முறையிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு இன்று மீண்டும் விசாரித்தது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சிறுவன் கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக கருதுவதால், சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை சஸ்பெண்ட் செய்ய மாநில அரசு முடிவு செய்தால், அதில் தலையிட முடியாது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். அரசு விருப்பப்படி இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என தெரிவித்தனர்.