திமுக அரசுக்கு பா.ரஞ்சித் நறுக் கேள்வி! Pa Ranjith | Director | DMK GOvernment
தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். சென்னையில் செம்பியம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். சட்டம் ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருக்க, அரசு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறது? இவ்வழக்கில், சரணடைந்தவர்கள் சொல்வதை வைத்தே, வழக்கை முடிக்க போலீசார் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு போலீஸ் வந்து விட்டதா? இதற்கு பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் போலீஸின் நிலைப்பாடு என்ன? இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? சமீப காலமாக தலித் மக்களுக்கும், தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? பெரம்பூரில் உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராமமான பொத்தூரில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது. உண்மையிலேயே திமுக அரசுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும். திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் ஓட்டுகள் என்பது வரலாறு.