செங்கோட்டையன் மூலம் பாஜவுக்கு பழனிசாமி செக் palanisamy vs sengottaiyan | admk vs bjp | amit shah
ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வரான பழனிசாமி, தினகரனை ஒதுக்கிவிட்டு, பன்னீர்செல்வம் ஆதரவுடன் 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்; அவருக்கு பாஜவும் உதவியது. 2021 சட்டசபை தேர்தலின்போது அதிமுக-பாஜ கூட்டணியில் தினகரனின் அமமுகவுக்கு சில தொகுதிகளை ஒதுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வற்புறுத்தினார். ஆனால் பழனிசாமி உடன்படவில்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்தது. அப்போது தினகரனும், பன்னீர்செல்வமும் பாஜவுக்கு கை கொடுத்தனர். அவர்களின் ஆதரவோடு தென் மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வாங்கியது. இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்காக பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது. இந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதில் பாஜ உறுதியாக உள்ளது. இதற்கு தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் அல்லது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பழனிசாமியிடம் பாஜ தலைமை வலியுறுத்தி வருகிறது. அவரோ ஏற்க மறுத்துவிட்டார். இதனால் சமீபத்தில் பன்னீர்செல்வமும், தினகரனும் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அடுத்தடுத்து அறிவித்தனர். இவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தடுக்க பாஜ முயற்சித்து வருகிறது. இப்படியொரு சூழலில் தான் அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணிகளை, 10 நாட்களுக்குள் பழனிசாமி துவங்க வேண்டும் என்று கூறி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார்.