இந்தியாவின் பதிலடிக்கு பயந்து நடக்கும் சம்பவங்கள் | POK | POK bunkers
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தங்கி இருந்த 42 இடங்களை ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. இதை அறிந்த பாகிஸ்தான், இந்திய ராணுவம் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக பயங்கரவாதிகளை பதுங்கு குழிக்குள் அனுப்பி வைத்தது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 200 தீவிரவாதிகள் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கெல், சர்தி, துத்னியல், அத்முகம், ஜூரா, லிபா, பச்சிபன், பார்வர்ட் கஹுதா, கோட்லி, குய்ரட்டா, மந்தர், நிகைல், சமன்கோட் மற்றும் ஜான்கோட் ஆகிய பகுதிகளில் இந்த பதுங்கு குழிகள் உள்ளது. இங்கிருந்து ஜம்மு- காஷ்மீருக்குள் ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 60 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதில் 17 பேர் அடிக்கடி நகர்ப்புறங்களில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை அடையாளம் கண்டு வேரறுக்கும் பணியில் இந்திய ராணுவம் இறங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பதுங்குகுழியில் இருந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதரஸாக்களில் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அங்கும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்பதால் மதரஸாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனல் காற்று மற்றும் வெப்பம் அதிகமாக இருப்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு சொல்கிறது. ஆனால், போர் பதற்றம் தான் விடுமுறைக்கு காரணம் என்பதை பாகிஸ்தான் அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரு வகை வெப்பம் நிலவுகிறது. ஒன்று இயற்கையான வெப்பம், இன்னொன்று இந்தியா கிளப்பியுள்ள உஷ்ணம் என அந்நாட்டு மத விவகாரத் துறை இயக்குனர் ஹபிஸ் நஸீர் அஹமது ஒப்புக்கொண்டுள்ளார்.