அம்பலப்படுத்திய சிசிடிவி: பெண் எஸ்ஐ பற்றி பரபரப்பு தகவல்கள் | sub inspector | Pranitha attack | VCK
அப்ப சும்மாதான் படுத்தாரா? எஸ்ஐ பிரணிதாவுக்கு சிக்கல் சிவகங்கை போலீஸ் பரபரப்பு அறிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பிரணிதா. 2 தினங்களுக்கு முன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பரபரப்பு புகாரை பிரணிதா கூறினார். இதில் கையில் காயம் ஏற்பட்டதாக கூறி, காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். அவர் மருத்துவமனையில் காயத்துடன் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீஸ் அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்கட்சித்தலைவர்கள் திமுக அரசை விளாசினர். இது தொடர்பாக பரவி வரும் செய்தி பொய்யானது என சிவகங்கை மாவட்ட போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோமநாதபுரம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக முத்ல கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் போலீஸ்நிலையத்தின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அடிப்படையில், சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. மிகைப்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது. கடந்த 5ம்தேதி மாலை அமராவதி கிராமத்தில் உள்ள கோயில் நில தகராறு தொடர்பாக இரு பிரிவினர் சோமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்திருந்தனர். அது குறித்து சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். அந்த நேரத்தில் வாகன சோதனையில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா போலீஸ் நிலையத்துக்குள் வந்தார். முத்துகிருஷ்ணன் விசாரணையில் தலையிட்டார். இதற்கு விசாரணைக்கு வந்திருந்த ஒரு பிரிவினர் ஆட்சேபணை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பிரணிதாவுக்கும் விடுதலை சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணைக்கு வந்திருந்த கிராமத்தினர் கலைந்து சென்றனர். சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா முதலில் தனியார் மருத்துவமனையிலும் அதைத் தொடர்ந்து காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்ந்தார். தன்னை 10 பேர் தாக்கியதாக கூறினார். அதேநேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பத்திரிகைகளுக்கு இதுதொடர்பான செய்தியை தெரிவித்துள்ளனர். முன்னதாக, பிரணிதா மீது பொதுமக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார். கடந்த 18.-11.-2024ம் தேதி நிர்வாக குற்றச்சாட்டு காரணமாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.