முக்கிய ஆதாரமாக விளங்கிய வீடியோ கிளிப், புடவை | Prajwal Revanna | Banglore court | Devegowda
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹாசன் தொகுதி முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது, வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில், மேலும் சில பெண்களும் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கை SIT எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. கடந்தாண்டு மே மாதம் பிரஜ்வல் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் பெங்களூரு எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் 1,652 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை எஸ்ஐடி அதிகாரிகள் தாக்கல் செய்தனர். வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தது நிரூபிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், பிரஜ்வல் குற்றவாளி என்று சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி சந்தோஷ் கஜானன் இன்று அறிவித்தார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, சாகும் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்தார். அபராத தொகையில் 7 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டதும் பிரஜ்வல் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக ஆபாச வீடியோ கிளிப்கள் சிக்கின. அந்த வீடியோக்களில் முகம் பதிவாகாவிட்டாலும், தடயவியல் பரிசோதனையில் உயர் தொழில்நுட்பத்தின் மூலம் அது பிரஜ்வல் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் பாதுகாத்து வைத்து இருந்த விந்தணுக்கள் படிந்த புடவையும் முக்கிய ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.