கேரள சட்டசபையில் தனியார் பல்கலை மசோதா நிறைவேற்றம் Private University Bill passed in Kerala| Kerala
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாய முன்னணி ஆட்சி செய்கிறது. நாட்டின் பிற மாநிலங்களை போல், இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வகை செய்யும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனுமதி வழங்கும் வகையில் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார் மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி தரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது பேசு பொருள் ஆனது. மசோதாவின் மீது அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மசோதாவுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மசோதாவின் முக்கிய அம்சங்களில் சில திருத்தங்கள் செய்ய வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன் பேசுகையில், நாங்கள் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. ஆனால், தனியார் பல்கலைகளின் வரவால், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அரசு பல்கலைகளுக்கு ஆபத்து வரக்கூடாது. கேரளாவின் கல்வித் துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பல்வேறு கார்பரேட் நிறுவனங்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார் பல்கலைகழகங்கள் தங்கள் இஷ்டம் போல் இயங்க அனுமதிக்காமல் கட்டுப்பாடு இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னிதலா பேசும்போது, சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்காக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்களை அழைக்க வேண்டும் என்றார். புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ ரெமா, மசோதாவை எதிர்த்தார். ஒரு காலத்தில் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முடிவு எடுப்பது நியாயமில்லை. இந்த முடிவு கல்வியை தனியார் மயமாக்கும். பணம் உள்ளவர் மட்டுமே உயர் கல்வி பயில முடியும் என்ற நிலையை உருவாக்கும் என்றார். உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய கல்வி அமைச்சர் பிந்து, தனியார் பல்கலைக்கழக மசோதா, கேரளாவின் கல்வி பாதையில் புதிய அத்தியாயமாக அமையும். கல்வி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். கல்வித்தரம் சீர்கெடாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் இன்றி பல்கலைக்கழகங்கள் இயங்க தகுந்த சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றார். பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.