அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார் ராகுல்! Rahul USA Visit | Rahul at USA | Sa
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வரும் 10ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கும் ராகுல், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் அங்கு கல்வி பயிலும் நம் நாட்டு மாணவர்களிடம் உரையாற்ற உள்ளார். டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் விமான நிலையத்தில், காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா, ராகுலை வரவேற்றார். அங்கு குவிந்த இந்தியர்கள் பலரும் ராகுலுக்கு பூங்கொத்து கொடுத்தனர். பெண்கள், சிறுமிகள் ஆரத்தி எடுத்து ராகுலை வரவேற்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் வரவேற்பு மிகுந்த உத்வேகம் அளிக்கிறது. இரு நாடுகளின் உறவை பலப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என நம்புகிறேன் என்று ராகுல் பதிவிட்டுள்ளார். 8ம் தேதி டெக்சாஸ் பல்கலை மாணவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றுகிறார். 9, 10ம் தேதிகளில் வாஷிங்டன் செல்லும் ராகுல் அங்குள்ள இந்தியர்கள், மாணவர்களை சந்தித்து பேச உள்ளார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பின் ராகுல் முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். இது அங்குள்ள காங்கிரஸ் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொழில் அதிபர்கள், மாணவர்கள், ராகுலின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பலரும் அவருடன் பேசவும், அவரது உரையை கேட்கவும் ஆர்வத்துடன் உள்ளனர் என, சாம் பிட்ரோடா கூறினார்.