ராஜ்யசபா எம்.பி பதவியை பிடிக்க போட்டா போட்டி | Rajya sabha election | 6 Seats in TN | Election
தமிழகத்துக்கு லோக்சபாவில் 39 இடங்களும், ராஜ்யசபாவில் 18 இடங்களும் உள்ளன. லோக்சபா உறுப்பினர்களை பொதுமக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பது போல், ராஜ்யசபா உறுப்பினர்களை இங்குள்ள எம்எல்ஏக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்வர். மொத்தம் உள்ள 18 ராஜ்யசபா உறுப்பினர்களில் இப்போது 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 உடன் முடிகிறது. அதாவது இப்போது எம்பிக்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா, மதிமுக வைகோ, பாமக அன்புமணி, அதிமுக சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் தான் முடிவுக்கு வருகிறது. இதனால் காலியாகும் 6 எம்.பி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 9 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜூன் 10 வேட்புமனு பரிசீலனை. 12ம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள். ஜூன் 19 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டு பதிவு நடைபெறும். அன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அந்த வகையில், திமுக கூட்டணிக்கு 159, அதிமுக கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. அப்படி பார்த்தால் திமுகவுக்கு 4 எம்.பிக்களும், அதிமுகவுக்கு 2 எம்.பிக்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.