உயிருடன் இருக்கும் மூதாட்டிக்கு ரத்தான ரேஷன் அட்டை | Ration card issue | Old lady complaint | Collec
திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள். வயது 80. இவர் உறவினர் துணையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், வயது முதிர்வு காரணமாக எனது மகன் மூலம் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறேன். இந்த சூழலில் எனது குடும்ப அட்டையை ரத்து செய்ததால் அதை புதுப்பிக்க செப்டம்பர் 23ல் மனு அளித்திருந்தேன். ஆனால் எனக்கு ரேஷன் அட்டை வழங்காமல் மனு நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. நான் உயிரோடு தான் இருக்கிறேன். ரேஷன் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து தான் எனது வாழ்க்கையை நடத்துகிறேன். எனவே தயவு செய்து குடும்ப அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மூதாட்டி உயிரோடு இருக்கும் போது அவர் இறந்ததாக கருதி ரேசன் அட்டையை தகுதி நீக்கம் செய்தது எபபடி? இறப்பு சான்றிதழ் தேவை இல்லையா? மீண்டும் அவர் அட்டை கேட்டு விண்ணப்பித்த போதும் களத்தில் சென்று விசாரிக்காமல் நிராகரித்தது சரியா? என்ற பல கேள்விகள் எழுகிறது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விசாரித்தபோது இ சேவை மையம் மூலமாக மனு அளித்து மூதாட்டியின் ரேஷன் அட்டை நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர்.