ஆந்திராவில் முதல் கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் | Seaplane | Andra Govt | Tourism development
சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சேவையை தொடங்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. விஜயவாடாவின் பிரகாசம் தடுப்பணையில் இருந்து புறப்பட்ட கடல் விமானம், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் உள்ள படகு குழாமுக்கு பாதுகாப்பாக சென்றது. இந்த சோதனை ஓட்டத்தை தேசிய பேரிடர் மேலாண்மை, போலீஸ், சுற்றுலா விமான படை அதிகாரிகள் முன்னின்று ஆய்வு செய்தனர். அடுத்தக்கட்ட சோதனை ஓட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். விஜயவாடாவில் இருந்து கடல் விமானத்தில் பயணம் செய்து ஸ்ரீசைலம் படகு குழாம் சென்றனர். வரும் 11ம் தேதி வரை சோதனை ஓட்டம் நடக்கும் என சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் இந்த கடல் விமானத்தில் 14 பேர் பயணிக்க முடியும். விஜயவாடாவை அடுத்து அரக்கு, லம்பாசிங்கி, ருஷிகுண்டா, காக்கிநாடா, கோனசீமா, ஸ்ரீசைலம், திருப்பதியிலும் கடல் விமான சேவையை கொண்டுவர ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய விமான போக்குவரத்து துறையின் உதான் திட்டத்தில் நாடு முழுவதும் கடல் விமான சேவை, வாய்ப்புள்ள இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் இப்போது முதல் முறையாக இந்த கடல் விமான சேவை தொடங்க உள்ளது.