உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதான் பால் தாக்கரே ஸ்டைல்: வருந்தாத எம்எல்ஏ: வலுக்கும் எதிர்ப்பு stinking dal shiv Sena MLA attacks

இதான் பால் தாக்கரே ஸ்டைல்: வருந்தாத எம்எல்ஏ: வலுக்கும் எதிர்ப்பு stinking dal shiv Sena MLA attacks

மகாராஷ்ட்ர மாநிலம், Buldhana புல்தானா சட்டசபை தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனவர் சஞ்சய் கெய்க்வாட். சிவசேனா ஷிண்டே பிரிவைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். மும்பை சர்ச்கேட் பகுதியில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கியிருக்கும் இவர், கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்தார். சாப்பாடு வந்ததும் சாப்பிடத் துவங்கினார். தால் Dal மூசிப்போயிருந்தது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தால் பாக்கெட்டுடன் கேண்டீனுக்கு வந்தார். கட்டிய டவலுடன் அவர் வந்ததைப்பார்த்து கேண்டீனில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. இதை எனக்கு யார் அனுப்பி வச்சது? என சஞ்சய் சத்தமாக கத்தினார். கேண்டீன் மானேஜர் யோகேஷ் நான்தான் அனுப்பினேன் என கூறினார். தால் பாக்கெட்டை நீட்டி, இதை நீயே மோந்து பார் என்றார். மானேஜர் யோகேஷ் மோந்து பார்க்கும்போதே, மூசிப்போயிருக்கா என கேட்டபடி, கெய்க்வாட் ஆவேசமாக அவரை சரமாரி அடித்தார். முகத்தில் பலமாக குத்தினார். எம்எல்ஏ குத்திய குத்தில் யோகேஷ் தூர போய் விழுந்தார். நான் ஒரு எம்எல்ஏ. எனக்கே நீங்க மூசிப்போனதை கொடுக்கறீங்க. அப்ப என்ன பாக்க வர்றவங்களுக்கும் இதைத்தானே கொடுப்பீங்க என சஞ்சய் ஆவேசமாக கூறினார். அப்போது, எம்எல்ஏவுடன் வந்த ஆதரவாளர் ஒருவர், இதைச் சாப்பிட்டா செத்துதான் போவாங்க என சொன்னார். மூசிப்போன தாலை சாப்பிட்டதால் என் வயிறு வலிக்குது என கூறியபடி, கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கஸ்டமர்களின் தட்டில் இருந்த தாலை எடுத்து மோந்து பார்த்து செக் செய்தார். எம்எல்ஏவின் இந்த செய்கை, கஸ்டமர்களை கடுப்பேற்றுவதாக இருந்தது. ஆனாலும் எம்எல்ஏவாச்சே என வாயை மூடிக்கொண்டிருந்தனர். அதன்பிறகும், கேண்டீன் மானேஜர் யோகே ைஷ சரமாரியாக எம்எல்ஏ சஞ்சயும் ஆதரவாளர் ஒருவர் அடித்தனர். பிறகு, மூசிப்போன தாலை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி, எம்எல்ஏ ஹாஸ்டல் கேண்டீனில் தரமற்ற உணவு பரிமாறப்படுவதாக சஞ்சய் கெய்க்வாட் புகார் கொடுத்தார். கேண்டீன் மானேஜரை எம்எல்ஏ தாக்கும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், எம்எல்ஏவின் அடாவடி செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி கேட்டபோது, நான் செய்தது சரிதான்; வருத்தப்படவில்லை என சஞ்சய் கெய்க்வாட் கூறினார். நான் பலஆண்டாக இந்தகேண்டீனில் சாப்பிடுகிறேன். சாப்பாடு தரமில்லாமல் இருப்பதாக பலமுறை புகார் செய்தேன். கேட்கவில்லை. மூசிப்போன தாலை சாப்பிட்டு நான் வாந்தி எடுத்தேன். இதற்கு யார் பொறுப்பு? கேண்டீன் மானேஜர்தானே.. இப்படி மோசமான உணவை சமைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கிறார்கள் அந்த கோபத்தில்தான் அடித்தேன் என கூறினார். ஒரு எம்எல்ஏ இதுபோல அடிதடியில் இறங்கலாமா? என கேட்டதற்கு, நான் எம்.எல்.ஏ மட்டுமல்ல; ஒருவீரனும்கூட. பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. அதான் பால்தாக்கரே எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாணியை பயன்படுத்தினேன் என சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ சொன்னார். நான் இளவயதில் ஜூடோ, கராத்தே, மல்யுத்தத்தில் சாம்பியனாக இருந்திருக்கிறேன்; நான் காந்தியவாதி அல்ல. இந்த பிரச்னையை சட்டசபையிலும் கிளப்புவேன் எனவும் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறினார். அடிவாங்கிய கேண்டீன் மானேஜர் யோகேஷ் போலீசில் புகார் செய்யாததால், சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என சொல்லி கேண்டீனில் புகுந்து ரவுடித்தனம் செய்யவா, இவரை எம்எல்ஏ ஆக்கினார்கள் என காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது, ஆளும் கட்சியினரின் அதிகார மமதையை காட்டுகிறது. ஒரு எம்எல்ஏவே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால், சட்டம் ஒழுங்கின் கதி என்ன? சஞ்சய் கெய்க்வாட்டை கைது செய்ய முதல்வர் பட்னவிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோல் Nana Patole வலியுறுத்தினார். வெறும் டவல் கட்டிக் கொண்டு, கேண்டீனுக்குள் வந்து மானேஜரை சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் அடித்த சம்பவம் மும்பை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலை 09, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K V Ramadoss
ஜூலை 09, 2025 19:16

நான் காந்தியவாதி அல்ல நான் ஒரு ரவுடி என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். கை நீட்டி அடிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. டி .வி யில் பார்க்கும்போது அந்த மேனேஜர் மீது பரிதாபமும் இவர்மீது கோபமும் வருகிறது. என்ன அடாவடித்தனம் குண்டர்களும், ரௌடிக்களும் அரசியல் செல்வாக்கு பெறும்போது அராஜகம்தான் நாட்டில் நிலவும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை