ஹிந்துக்கள், சீக்கியர்களை வஞ்சிக்கும் பாகிஸ்தான் அரசு: வழிபாட்டு தலங்களை பராமரிப்பதில் அலட்சியம்
அண்டை நாடான பாகிஸ்தானில், மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும், ஹிந்துக்கள், சீக்கியர்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். ஹிந்துக்கள், சீக்கியர்கள் வழிபடுவதற்காக அந்நாட்டில் மொத்தம் 1817 வழிபாட்டு தலங்கள் உள்ளன. இவற்றில், கோயில்கள் மற்றும் குருத்துவாராக்கள் அடங்கும். ஆனால், பாகிஸ்தான் அரசின் மெத்தனப் பாேக்கால், அவற்றில் 37 வழிபாட்டு தலங்களில் மட்டுமே வழிபாடு நடப்பதாகவும், மற்ற அனைத்தும் பராமரிப்பின்றி கிடப்பதாகவும் பாகிஸ்தான் பார்லிமென்ட் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான டாக்டர் ரமேஷ் குமார் வாக்வானி கூறியதாவது: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள், சொத்துக்களை நிர்வகிக்கும் அரசு அமைப்பு அந்த கடமையை சரியாக செய்யவில்லை. சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளிக்கும் வாக்குறுதியை முறையாக நிறைவேற்ற வேண்டும். பாகிஸ்தான் அரசின் கீழ் இயங்கும் சொத்து மீட்பு மற்றும் பராமரிப்பு குழுவின் பொறுப்பை, முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் வழங்க வேண்டும். அப்போது தான் பாரபட்சமற்ற முறையில் அதை நிர்வகிக்க முடியும். 1947ல் இந்தியா - பகாகிஸ்தான் பிரிவினையின் போது, இங்கிருந்து இந்துக்கள், சீக்கியர்கள் விட்டுச் சென்ற அவர்களின் வழிபாட்டு தலங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அவை வெறும் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல. அவற்றில் பல பாரம்பரிய சின்னங்களும் அடங்கியுள்ளன. இவை மத ரீதியிலான அடையாளமாக மட்டுமின்றி, பாகிஸ்தானின் கலாசார பெருமைகளை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.