திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்படும் போலீஸ்: திடீர் பரபரப்பு | Thiruparankundram | Temple
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்ற ஒருவர் ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் மணப்பாறை திமுக எம்எல்ஏ அப்துல்சமது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தார். இது குறித்து விளக்கம் கேட்டு மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு சட்டசபையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. தொடர் ஜல்லிக்கட்டு காரணமாக அடுத்த வாரம் பதில் அனுப்ப கலெக்டர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சில அமைப்புகள் தடையை மீறி திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி அறுத்து சம்பந்தி விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் மலை மீது யாரும் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், மலை முழுதும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும் சொல்கின்றனர். மலை மீது ஆடு, மாடு, கோழி பலி கொடுப்போம் என்றும் கூறி வருகின்றனர். மலை மீது அத்துமீறி ஆடு வெட்ட முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அவர்கள் வழிபாட்டு உரிமையை பறிப்பதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை. மலை மீது ஆடு பலி கொடுக்க வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவிக்கப்பட்டது. அதை மீறி சமூகநல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து என்ற போர்வையில் மலை மீது ஆடு, கோழி பலி கொடுக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளனர். இது முருகப்பெருமானை அவமதிக்கும் செயல். சட்டம் ஒழுங்கு பிரச்னை, மத மோதலை உண்டாக்க வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோலை கண்ணன் கூறியுள்ளார்.