திருவள்ளூர் சிறுமி சம்பவம்: இதுவரை வெளிவராத பகீர் | tiruvallur girl case | tiruvallur girl case cctv
திருவள்ளூரை சேர்ந்த 10 வயது சிறுமியை கொடூரன் ஒருத்தன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டது. பாலியன் வன்கொடுமை நடப்பதற்கு முன்பு, பட்டப்பகலில் நடுரோட்டில் சிறுமியை வாயை பொத்தி தரதரவென அவன் மாந்தோப்புக்குள் இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்தது. சிசிடிவி ஆதாரம் இருக்கிறது; கொடூரனின் முகம் தெளிவாக பதிவான காட்சியும் இருக்கிறது; ஆனால் இப்போது வரை அவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? எங்கே இருக்கிறான்? என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தான் கொடூரன் என்னவெல்லாம் செய்தான் என்பது பற்றி இதுவரை வெளியே வராத பல திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், உள்ளூர் மக்கள், போலீசார் கூறியது: பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி 4ம் வகுப்பு படிக்கிறாள். சம்பவத்தன்று பகலில் ஆரம்பாக்கம் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு புறப்பட்டாள். அந்த பகுதியில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனை தாண்டி அவள் பாட்டி வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். இருபக்கமும் மாந்தோப்புகள் இருக்கும் இடம். ஆள் நடமாட்டமே இல்லாத வேளை. சிறுமி மட்டும் தனியாக செல்வதை பார்த்த அவன், அவளது வாயை பொற்றி, தரதரவென ரோட்டில் இருந்து இழுத்து சென்றான். மாந்தோப்புக்குள் கொண்டு சென்று சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறான். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இந்த நிலையில் தான் சம்பவம் நடப்பதற்கு முன்பு அவன் அந்த பகுதிக்கு ரயிலில் வந்து இறங்கியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த கொடூரன், அந்த பகுதியை நோட்டம் பார்த்து இருக்கிறான். அப்போது அந்த பகுதியில் தனியாக ஒரு பெண் நின்று இருக்கிறார். தன்னை அழைத்து செல்ல வரும் உறவினருக்காக அவர் காத்திருந்தார். முதலில் அவரை தான் கொடூரன் குறி வைத்து இருக்கிறான். ஆனால் அவனது நடத்தையை பார்த்தே, அந்த பெண்ணுக்கு சந்தேகம் வந்து இருக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியை நோக்கி வேகமாக சென்று விட்டார். அவனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர் தொடர்ந்து அங்கிருந்து நடந்து சென்றவன். ஒரு மாந்தோப்பின் பின் பகுதியில் உள்ள நுழைவு வாயிலில் காத்திருந்தான். அப்போது தான் சிறுமி தனியாக நடந்து வருவதை பார்த்தான். அவள் அவனை தாண்டி செல்லும் வரை காத்திருந்தான். பின்னர் அவளது பின்னால் நடந்து சென்றான். ஆள் யாருமே இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் அவளை வாயை பொற்றி மாந்தோப்புக்குள் இழுத்து சென்று இருக்கிறான். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் போது, அவனிடம் இருந்து தப்பிக்க அவள் எவ்வளவோ போராடி இருக்கிறாள். ஆனால் அந்த அரக்கன் பல முறை கொடூரமாக சிறுமியை தாக்கி இருக்கிறான். உடலின் பல இடங்களில் கடித்துள்ளான். வன்கொடுமை நடக்கும் போது அவனுக்கு பல முறை போன் வந்து இருக்கிறது. அந்த போனில் ஒலித்த ரிங்டோன் நிச்சயம் தமிழ் அல்ல. அது இந்தி பாடலாக இருக்க கூடும் என்று பாதிக்கப்பட்ட சிறுமி இப்போது கூறி இருக்கிறாள். சிசிடிவி காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட அவனது முகம் தொடர்பான காட்சிகளை சோதித்த போலீசாரும் அவன் வடமாநிலத்தை சேர்ந்தவனாக தான் இருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்தனர். காம கொடூரனால் அதே இடத்தில் இன்னொரு சிறுமியும் பாதிக்கப்படும் அபாயம் இருந்திருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவளை காப்பாற்றி இருக்கிறாள். அதாவது, மாந்தோப்புக்குள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, கடைசியில் அங்கிருந்து வெளியே ஓடி வந்தாள். அப்போது இன்னொரு சிறுமி தனியாக நடந்து செல்வதை பார்த்தாள். அவளையும் கொடூரன் கை வைக்க கூடும் என்று சிறுமி பதறினாள். அவனிடம் இருந்து தப்பி ஓடும் போதே, அந்த சிறுமியையும் எச்சரித்தாள். அவள் தூரத்தில் வரும் போதே, ஓடி விடு... ஓடி விடு... என்று சத்தம் போட்ட படி சிறுமியும் ஓட்டம் பிடித்தாள். இதனால் இன்னொரு சிறுமி தப்பி இருக்கிறாள். இப்போது சிசிடிவி காட்சியை துருப்புச்சீட்டாக வைத்து கொடூரனை தேடும் பணியில் பல தனிப்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.