டிரம்ப் - புடின் சந்திப்பை உற்று நோக்கும் உலக நாடுகள் Trump - Putin to Speak about Russia - Ukraine
உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ள உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் முயற்சிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அழைப்பை ஏற்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகை சென்ற நேரம் அந்த சந்திப்பை எதிர்பாராத சம்பவமாக மாற்றி விட்டது. அமெரிக்காவை குற்றம் சாட்டும் வகையில் ஜெலன்ஸ்கி பேசுவதாக கோபப்பட்ட டிரம்ப், அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். தொடர்ந்து, உக்ரைனுக்கான ஆயுத உதவியை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது. எனினும், அமைதி பேச்சுக்கான கதவை அமெரிக்கா எப்போதும் திறந்து வைத்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். அமெரிக்காவின் ஆயுத உதவி இல்லாமல் ரஷ்யாவின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் திணறியது. இதையடுத்து அமெரிக்காவின் சமாதான பேச்சு உடன்படிக்கைக்கு சம்மதிப்பதாக ஜெலன்ஸ்கி கடந்த வாரம் அறிவித்தார். ஜோ பைடன் அதிபராக இருந்த காலத்தில் உக்ரைனை ஆதரித்த அமெரிக்கா, தற்போது திடீரென ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.