சுரங்கத்தில் சிக்கியவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்கிறார் அமைச்சர் | Tunnel collapse | Nagarkurnool
48 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணி நீடிக்கும் பதட்டம் தெலங்கானாவின், நாகர்கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் அணைக்கு பின் பகுதியில் 44 கி.மீ., தூரம் கொண்ட சுரங்கம் தோண்டப்படுகிறது. கடந்த சனிக்கிழமை காலையில் சுரங்கத்தில் சில பணியாளர்கள் நீர்க்கசிவு பிரச்னையை சரிசெய்து கொண்டிருந்தனர். அப்போது 14-வது கிலோ மீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு திடீரென சுரங்கம் இடிந்தது. அங்கிருந்து உடனே பலரும் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், சுமார் 8 பணியாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான மீட்பு பணிகள் 48 மணி நேரம் கடந்தும் தொடர்கிறது. மீட்பு பணிகளை விரைவுபடுத்த பிற மீட்பு குழுவினருடன் இணைந்து ராணுவமும் களத்தில் இறங்கி உள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் உதவ இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் பணிக்குழு இணைந்துள்ளது. கடற்படை கமாண்டோக்களும் மீட்புக் குழுவினருக்கு உதவ சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். சுரங்க விபத்து நடந்த இடத்தில் தெலங்கானா அமைச்சர் கிருஷ்ண ராவ் பார்வையிட்டார். உண்மையை சொல்லவேண்டும் என்றால், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு மிக மிக மிக குறைவு. ஏனென்றால், நான் சுரங்கம் இடிந்த கடைசி பகுதி வரை சென்றேன். கிட்டத்தட்ட 50 மீட்டர் இடைவெளி தான். நாங்கள் அதனை போட்டோ எடுத்தபோது, சுரங்கத்தின் முடிவே தெரியவில்லை. சுரங்கப்பாதையின் 9 மீட்டர் விட்டத்தில், கிட்டத்தட்ட 30 அடிக்கு 25 அடி வரை சேறு குவிந்துள்ளது. நாங்கள் அவர்களின் பெயர்களை சொல்லி சத்தமாக அழைத்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. சுரங்கப்பாதைக்குள் சேறு மிகவும் உயர்ந்த அளவு குவிந்துள்ளதால் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் ரப்பர் ட்யூப்ஸ், மரப் பலகைகளை பயன்படுத்தி செல்கின்றனர். உள்ளே சிக்கியவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் கடினம் தான். ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், எந்த முயற்சியையும் கைவிட்டுவிடவில்லை என்றார்.