மாமல்லபுரத்தில் விஜய் செய்தது என்ன? பரபரப்பு தகவல் karur stampede | tvk vijay mamallapuram meeting
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் அறிவித்த விஜய், அவர்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். ஒரு மாதம் ஆகியும் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் பார்க்கவில்லை என்று பல கட்சிகளும் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் தான் பலியானவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பத்தினரை இன்று மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலுக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார் விஜய். ஓட்டலுக்கு வந்ததும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து பலியானவர்கள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்த 110 பேரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்தார். அனைவரிடமும் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். கண்ணீர் மல்க அவர்களிடம் பேசினார். ‛கரூருக்கு நேரில் வந்து உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். சென்னைக்கு அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூர் வந்தும் சந்திப்பேன். வாழ்நாளின் இறுதி வரை நான் உங்களுடன் இருப்பேன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் நான் செய்து தருவேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவரின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், மருத்துவம் போன்ற அனைத்து வகை செலவுகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று விஜய் கூறி இருக்கிறார்.