எதிர்ப்பு கிளம்பியதால் யுஜிசி நெட் தேர்வில் மாற்றம் செய்த NTA | UGC Net exam | Postpone announcement
உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள், பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்புக்கான தகுதித் தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான யுஜிசி - நெட் தகுதித் தேர்வு ஜனவரி 3 முதல் 16 ஆம் தேதி வரை நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த அட்டவணையில் 30 பாடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி 15, 16-ல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மாட்டு பொங்கல் தினத்தில் நெட் தேர்வை நடத்த தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அன்றைய தினம் நடக்கும் தேர்வுக்கான தேதிகளை மாற்றக்கோரி முதல்வர் ஸ்டாலின், மத்திய உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை போல, ஜனவரி 15ல் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்கள், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 15ம் தேதி நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. 16-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். ஒத்தி வைத்த தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.