வடிவேலு தொடர்ந்த வழக்கு; கோர்ட்டில் சிங்கமுத்து உறுதி actor vadivelu| singamuthu|
நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து இருவரும் இணைந்து பல தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர்கள். நிலப்பிரச்னை காரணமாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டனர். இச்சூழலில் சிங்கமுத்து மீது ஐகோர்ட்டில் வடிவேலு வழக்கு தொடர்ந்தார். யூ டியூப் சேனல்களில் பேட்டி அளித்த சிங்கமுத்து, தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். அந்த வீடியோக்கள் வைரல் ஆகின்றன. இதற்கு நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். தம்மை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் என்று வடிவேலு கோரியிருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுக்கு எதிராக அவதூறாக சிங்கமுத்து பேசக்கூடாது; அதற்கான உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே கொடுத்த பேட்டிகள் தொடர்பான வீடியோக்களை நீக்க சம்பந்தப்பட்ட யூ டியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து கடிதம் எழுத வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிங்கமுத்து உத்தரவாத மனுத்தாக்கல் செய்தார்.