திருச்சியில் திடீர் ரயில் மறியல்: 30 பேரை கைது செய்த போலீஸ் VAIGAI EXPRESS trichy cauvery river br
மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9 மணியளவில் திருச்சியில் காவிரி ஆற்று பாலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென 30க்கு மேற்பட்டவர்கள் கையில் கொடிகளுடன் ரயிலை மறித்தனர். தண்டவாளத்தில் ஆட்கள் நிற்பதை கவனித்து விட்ட இன்ஜின் டிரைவர் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தினார். திடீரென ரயில் நின்றதால் பயணிகளும் என்ன ஆச்சு என எட்டிப் பார்த்தனர். விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ரயில் முன் கொடிகளுடன் நின்றிருந்தனர். சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி, விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்; உரிய விலை கேட்டு பஞ்சாபில் போராடும் விவசாயிகளை கைது செய்ததை கண்டித்தும் இந்த திடீர் ரயில் மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர். திருச்சி போலீசாரும் ரயில்வே போலீசாரும் விரைந்து சென்று அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்தனர். திருச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது பற்றி ரயில்வே போலீசாரும் திருச்சி போலீசாரும் ஆலோசித்து வருகின்றனர். ரயில் மறியல் போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணிநேரம் கழித்து அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.