சீமான் ஆஜராவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு | Seeman | NTK | Valasaravakkam Police Station | Strong
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக நேற்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று சம்மன் ஒட்டப்பட்டது. உடனடியாக, சீமான் ஆதரவாளர் ஒருவர் சம்மனை கிழித்தார். இதுகுறித்த விசாரணைக்காக, போலீசார் சீமான் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அவர்களை, சீமான் வீட்டு காவலாளி தடுத்து நிறுத்தியதால், கைகலப்பு ஏற்பட்டது. போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த காவலாளி மற்றும் சம்மனை கிழித்த சீமான் ஆதரவாளர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சீமான் இன்று மாலை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகிறார். இதற்காக நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியில் திரள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரும் உஷார்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.