சட்டசபை தேர்தலுடன் சேர்த்தே நடத்த வாய்ப்பு! | Valparai by-election | AADMK MLA | 2026 Election
வால்பாறை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர் அமுல் கந்தசாமி. வயது 60. இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்ற 21ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பின் வால்பாறை தொகுதி காலியாக உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியில் எம்எல்ஏ அல்லது எம்பி பதவி காலியானால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அப்படி வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் அரசியல் கட்சிகளுக்கு 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும். யாருக்கு வெற்றி கிடைக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இப்போது ஆட்சியில் உள்ள திமுக அரசின் பதவிக்காலம், 2026 மே 9ல் முடிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வட்டாரம் கூறுகிறது. முன்னதாக 2020 ஜூன் 10ல் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் மறைந்தார். அப்போதும் சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே இருந்ததால், 2021 பொதுத்தேர்தலுடன் சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டது.