துணை ஜனாதிபதி தேர்தல்: 21ம் தேதி வரை மனு செய்யலாம் Vice President Election | NDA Meeting | Modi | JP
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21ம் தேதி ராஜினாமா செய்தார். ஜனாதிபதி முர்மு அவரது ராஜினாமாவை ஏற்றதை அடுத்து, துணை ஜனாதிபதி பதவி காலியானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் துவங்கின. தேர்தலில் ஓட்டளிக்கும் எம்பிக்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்தது. இதையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் துவங்கியது. வரும் 21ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் எனவும் தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. 22ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கும். 25க்குள் மனுக்களை திரும்ப பெறலாம். செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகும். இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து விவாதிப்பதற்காக, டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பார்லிமென்ட் கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலுங்கு தேசம், சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர்.