பெண்ணுக்கு நடந்த துயரம்: நாமக்கல்லில் பரபரப்பு Woman dies namakkal kumarapalaiyam Finance company p
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி தனக்கொடி. இருவருமே விவசாய கூலி தொழிலாளிகள். தனக்கொடி மகளிர் சுய உதவிக்குழு சிபாரிசின்பேரில் நான்கு நிதி நிறுவனங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வாரந்தோறும் தவணை செலுத்தி வந்தார். சில வாரங்களாக போதிய வருமானம் இல்லாததால் கட்ட முடியாமல் அவதிப்பட்டார். கடனை திருப்பி செலுத்தும்படி நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தன. ஒரு நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனர். இன்று மாலைக்குள் கட்ட வேண்டுமென கெடு விதித்தனர். ஆனால் தவணையை கட்ட முடியவில்லை. மாலையில் தனக்கொடி வீட்டுக்கு நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் வந்தனர். ஆபாச வார்த்தைகளில் தனக்கொடியை திட்டியுள்ளனர். மனமுடைந்த தனக்கொடி வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். யார் தட்டியும் திறக்கவில்லை. கணவர் கோபி வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். சேலையில்தூக்கு போட்டு தனக்கொடி தற்கொலை செய்திருந்தார்.