விடிய விடிய ரோந்து போன எஸ்ஐ: ஸ்டேஷனில் மரணம்: நடந்தது என்ன? woman SI kamatchi dies pelukurichi pol
திருபுவனத்தில் நகை திருட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸ் தாக்கியதில் இறந்தார். அந்த சம்பவம் அரசியல் பிரச்னையக மாறியுளள நிலையில், தேனி போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவரை போலீஸ் அதிகாரி கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியானது. 3வதாக, நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்திலேயே பெண் எஸ்ஐ திடீர் மரணமடைந்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு: ராசிபுரம் அடுத்துள்ள பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக காமாட்சி(48) பணி புரிந்து வந்தார். காமாட்சி நேற்று இரவு பணி செய்தார். நள்ளிரவு ரோந்து பணிக்கு சென்றார். அதிகாலை 2 மணிக்கு சோர்வுடன் போலீஸ் நிலையத்துக்கு திரும்பினார். ஓய்வறைக்கு சென்று படுத்தார். காலை 6 மணிக்கு கணவருக்கு போன் செய்துள்ளார். உடல் ரொம்ப அசதியாக உள்ளது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வருகிறேன் என சொல்லியிருக்கிறார். காலை 11 மணி வரை அவர் ஓய்வறையை விட்டு வராதால் பணியில் இருந்த போலீசார் கதவை தட்டினர். பலமுறை தட்டியும் பதில் வராததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது பாயில் படுத்திருந்தார். போலீசார் சோதித்து பார்த்தபோது மூச்சு இல்லை. உயிர் பிரிந்திருந்தது. காமாட்சியின் கணவர் பத்திரிகையாளராக உள்ளார். மகள் கல்லூரியில் படிக்கிறார். காமாட்சி இறந்தது பற்றி அறிந்ததும் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்துக்கு ஓடி வந்தனர். காமாட்சி உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து, காமாட்சி உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும், பிரேத பரிசோதனை முடிவில்தான் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் கூறினார். சப் இன்ஸ்பெக்டர் காமாட்சி வயிற்றில் கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக, 40 நாட்கள் மெடிக்கல் லீவில் இருந்தார். ஒரு வாரத்துக்கு முன்புதான் பணியில் மீண்டும் சேர்ந்தார். நேற்றும் உடல்நலம் இல்லாதபோதும் இரவுப்பணியில் இருந்துள்ளார். இன்னும் கொஞ்ச நாள் மெடிக்கல் லீவு கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவரது திடீர் மரணம் சக போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.