உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வருத்தத்தில் அதிமுக சீனியர்கள் காரணம் என்ன? | ADMK | Palnisami | Sengottaiyan

வருத்தத்தில் அதிமுக சீனியர்கள் காரணம் என்ன? | ADMK | Palnisami | Sengottaiyan

இறங்கி வர மறுக்கும் பழனிசாமி செங்கோட்டையன் அதிருப்தி தொடருது ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இன்னும் அவரது அதிருப்தி தொடர்வதாகவே கூறப்படுகிறது. முன்னதாக அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு கோவையில் பாராட்டு விழா நடந்தது. விழா மேடை மற்றும் விளம்பரங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதை வெளிப்படையாக அவரே பேசினார். பொதுவெளியில் உள்கட்சி விவகாரங்களை, வெளியில் பேசும் வழக்கம் இல்லாதவர் செங்கோட்டையன். அவரது புறக்கணிப்பும், கருத்தும் அதிமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை திருப்பி அனுப்பிய செங்கோட்டையன், என் மனதில் பட்ட கருத்தை சொன்னேன். கட்சிக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டேன். அன்று பேசியது, அப்போதே முடிந்து விட்டது என்றார். அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டோர்; ஒதுங்கி இருப்போரின் ஆதரவாளர்கள் சிலர் செங்கோட்டையனிடம் பேசி பழனிசாமிக்கு எதிராக கொம்பு சீவி உள்ளனர். ஆனால் அவை எதற்கும் செங்கோட்டையன் பிடிகொடுக்கவில்லை. கட்சியில் முக்கிய தலைவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் காணப்பட்டது. முக்கிய தலைவர்களுக்கு எதிராக லோக்கலிலேயே எதிர்ப்பு அணியை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுதான் எனக்கான முக்கிய பிரச்னை. அதை வெளிப்படையாக சொல்லி உள்ளேன். மற்றபடி, எனக்கு வேறெந்த எண்ணமும் இல்லை என தெளிவாக சொல்லி விட்டார். செங்கோட்டையன் விவகாரத்தில் இருந்து அவர்கள் விலகினர். செங்கோட்டையன் அமைதியான பின்பாவது பழனிசாமி பேசி சமாதானப்படுத்தி இருந்தால் இந்தப் பிரச்னை தொடராது. ஆனால், பழனிசாமி அதை செய்யவில்லை. அதனால் செங்கோட்டையனின் வருத்தம் தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சியில் பழனிசாமியை விடவும் சீனியர் செங்கோட்டையன். இருந்தும் அவரது தலைமையை ஏற்று பயணித்து வருகிறார். மற்றவர்கள் போலவே தானும் நடத்தப்படுவது, அவருக்கு வருத்தத்தை தந்துள்ளது. செங்கோட்டையனை சந்தித்தோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பழனிசாமி சமாதானப்படுத்தினால், பலரும் இப்படி அதிருப்தியை வெளிப்படையாக தெரிவிக்கத் துவங்குவர். பின் சமாதானப்படுத்துவதே வேலையாகி, கட்சி கட்டுப்பாடு சீர்குலைந்து விடும். அதனால் செங்கோட்டையன் விஷயத்திலும் பழனிசாமி இறங்கி வர மறுக்கிறார். நடப்பது கட்சிக்கு நல்லதல்ல என்பதே சீனியர்கள் பலரின் வருத்தம். இருந்தாலும் அதையும் கூட பழனிசாமியிடம் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்றனர்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை