கட்சி தலைமை பதவி பறிபோகும் என பயமா? Admk| EPS| sasikala| OPS
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் அக்கட்சிக்கு உள்ளும் வெளியேயும் அதிகமாகி இருக்கிறது. முன்பு சசிகலா பேசி வந்தார். தேர்தலில் தோற்ற பின், இப்போது ஓ பன்னீர் செல்வமும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், இதில் பழனிசாமிக்கு துளியும் விருப்பம் இல்லை. லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. 10ம் தேதி நடந்த கூட்டத்தின்போதே அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி யாரும் பேசக்கூடாது என்று பழனிசாமி நிர்வாகிகளுக்கு கண்டிஷன் போட்டு இருந்தார். ஆனால் அதையும் தாண்டி, ஒருங்கிணைப்பு பற்றிய கோரிக்கை எழுந்துள்ளது. இன்று அரக்கோணம் லோக்சபா தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. அப்போது, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென சில நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். அதற்கு பழனிசாமி முடியாது என கூறியிருக்கிறார். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, வைத்தியலிங்கம் ஆகியோருக்கு அதிமுகவில் இனியும் இடம் இல்லை. அவர்களது ஆதரவாளர்கள் வந்தால் வேண்டுமானால் சேர்க்கலாம் என கூறியிருக்கிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தாலும் பழனிசாமி அதை விரும்பாதது அல்லது தவிர்ப்பது ஏன்? கட்சியிலும் ஆட்சியிலும் இபிஎஸ்தான் தலைமை வகிக்கிறார். ஒருவேளை அதிமுகவை ஒருங்கிணைத்தால் தமது தலைமைக்கு ஆபத்து வருமோ என நினைக்கிறார். கட்சி தலைமை பொறுப்புக்கு பழனிசாமி வந்த பின், உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தல் என அதிமுக சந்தித்த 10 தேர்தல்களிலும் தோல்விதான் அடைந்துள்ளது. ஒருவேளை அதிமுகவை ஒருங்கிணைத்து அதன் பின் வெற்றி கிடைத்தால், வெளியில் இருந்து வந்தவர்களால்தான் இது சாத்தியமானதாக சொல்லப்பட்டும். கட்சிக்குள் அவர்களின் கை ஓங்கும். அதன் பின் தம்மை ஓரங்கட்டி விடுவார்கள் என நினைக்கிறார்.