உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராமதாஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டம் செல்லாது: பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு

ராமதாஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டம் செல்லாது: பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு

#Ramadoss| Anbumani| PMK| TNelectin| TNpolitics| DMK| BJP| ADMK| பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே நிலவும் மோதல் போக்கு இன்னும் முடிந்தபாடில்லை. இருவரின் ஆதரவாளர்களும் கட்சி தங்கள் தரப்புக்கே சொந்தம் எனக் கூறி வரும் நிலையில், அன்புமணியை கட்சித் தலைவராக தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், வரும் 29ம் தேதி சேலத்தில் ராமதாஸ் தலைமையில், பாமக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் ராமதாஸ் தரப்பினர் தீவிர கதியில் மேற்கொண்டுள்ளனர். சேலத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில், தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். இது அன்புமணி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், அந்த கூட்டத்திற்கு எவ்வித பவரும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, பாமக தலைவராக தேர்தல் கமிஷன் தன்னை அங்கீகரித்துள்ள நிலையில் ராமதாஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழு எந்த விதத்திலும் செல்லுபடியாகாது என அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாக இருந்துவரும் ராமதாஸ் - அன்புமணி, தற்போது கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பான இரு தரப்பு நடவடிக்கைகளால், ஒருவருக்கொருவர் மேலும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாமக விதிகளின் படி, பொதுக்குழு உட்பட, எந்த கூட்டமாக இருந்தாலும், கட்சி தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு தான் நடத்தப்பட வேண்டும். சென்னை, டில்லி ஐகோர்ட்களில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், பாமக தலைவர் அன்புமணி தான் என்பது உறுதியாகியுள்ளது. பொதுக்குழுவை கூட்டவும், அதை நடத்தவும், அன்புமணியை தவிர யாருக்கும் அதிகாரம் கிடையாது. கட்சிப் பெயரை கூறி, ஒரு சிலர் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களின் செயல் குறித்து தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 29ம் தேதி பாமக பெயரில் நடக்கும் பொதுக்குழு கூட்டமும், அதில் எடுக்கப்படும் முடிவுகளும் எந்த வகையிலும் செல்லாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ராமதாஸ் கூட்டம் நடத்துவதற்கு முன்பே, அன்புமணி தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ராமதாஸ் தரப்பினருக்கு எரிச்சலையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அன்புமணியை சட்ட ரீதியில் எதிர்கொள்ள ராமதாஸ் தரப்பும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதால், பாமகவில் அதிகார மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால், பாமகவில் நடக்கும் உள்கட்சி மோதல் விரைவில் முடிவுக்கு வந்தால் தான் கட்சிக்கு நல்லது என, கட்சித் தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை