திமுக கூட்டணியினர் பேச்சு; அதிர்ந்து போன தேஜஸ்வி bihar election| tejaswi yadav| indi alliance
பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நடந்தது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள். இந்த தகவல் வெளியானதும், தமிழகத்தில் உள்ள 6.5 லட்சம் பீகாரிகளை, தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி நடப்பதாக இண்டி கூட்டணி கட்சியினர் கூறினர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறும்போது, தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரிகளை சேர்ப்பது ஆபத்தானது; சட்ட விரோதமானது; தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடும் செயல் என கடுமையாக விமர்சித்தார். விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் பீகாரிகளை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி நடப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். பீகாரிகளுக்கு எதிராக தமிழகத்தில் இண்டி கூட்டணியினர் கொந்தளித்து இருப்பது, பீகாரில் அந்த கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், பீகாரிகளுக்கு ஓட்டுரிமை கூடாது என பேசும் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பதாக பாஜ பிரசாரம் செய்ய திமுக கூட்டணி வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. இது பீகாரில் தங்களுக்கு தோல்வியை தந்துவிடும் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக திமுக எம்பிக்கள் கனிமொழி, பாலு உள்ளிட்டோருடன் தேஜஸ்வி பேசியிருக்கிறார். அப்போது, பீகாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் முஸ்லிம், யாதவ் மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பாஜவின் ஓட்டு வங்கி அல்ல. வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலே பாஜவினர் என நினைப்பது தவறு. தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டால், அது திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். பீகாரிகளுக்கு எதிராக பேசினால் அது பாஜவுக்கு சாதகம் ஆகிவிடும் என தேஜஸ்வி கூறியிருக்கிறார் இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களில் சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றி கணக்கெடுப்பு நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.