உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆம் ஆத்மி ஆட்சியில் போக்குவரத்து துறையில் ₹8,500 கோடி நஷ்டம் CAG Report on DTC Released| Delhi Bud

ஆம் ஆத்மி ஆட்சியில் போக்குவரத்து துறையில் ₹8,500 கோடி நஷ்டம் CAG Report on DTC Released| Delhi Bud

டில்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று துவங்கியது. முதல்வர் ரேகா குப்தா பாயசம் தயாரித்து, அனைவருக்கும் வழங்கினார். 27 ஆண்டுகளுக்கு பின் டில்லி சட்டசபையில், பாஜ அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இனிப்புடன் துவங்குவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து, முந்நதைய ஆம் ஆத்மி ஆட்சியில், டில்லி போக்குவரத்து கழகத்தில் நடந்த வரவு செலவு குறித்த சிஏஜி அறிக்கையை, முதல்வர் ரேகா சட்டசபையில் தாக்கல் செய்தார். சிஏஜி அறிக்கை மீதான விவாதத்தில் பாஜ எம்எல்ஏ ஹரிஸ் குரானா பேசுகையில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து துறை பற்றிய சிஏஜி அறிக்கை, முந்தைய ஆம் ஆத்மி அரசின் கையால் ஆகாத தனத்தை வெளிப்படுத்தி உள்ளது. அவர்களின் தவறான மேலாண்மையால், போக்குவரத்து கழகம் கடும் நிதி இழப்பை சந்தித்துள்ளது. 2013 - 15 இடைப்பட்ட காலத்தில் டில்லியில் 11,000 புதிய அரசு பஸ்கள் இயக்கப்படும் என அப்போதைய ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. ஆனால் அதே காலகட்டத்தில் அரசு பஸ்களின் எண்ணிக்கை 4,344ல் இருந்து 3937 ஆக குறைந்தது. பாஜவை சேர்ந்த மதன்லால் குரானா ஆட்சி காலத்தில் லாபத்தில் இயங்கிய டில்லி போக்குவரத்து கழகம், அதற்கு பிந்தைய ஆட்சியில் 8,498 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. இதில் ஆம் ஆத்மி ஆட்சியில் மட்டும் 5,000 கோடி ரூபாய் நஷ்டம் அதிகரித்தது. டில்லி போக்குவரத்து கழகத்தின் ஆண்டு வருமானம் 914 கோடி ரூபாயாக இருந்த நிலையில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததும் 558 கோடியாக சரிந்தது. போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 3.18 லட்சம் சதுர மீட்டர் பரப்பிலான இடத்தை, எவ்வித வாடகையும் வசூலிக்காமல் தனியார் பஸ்கள் நிறுத்த ஆம் ஆத்மி அரசு அனுமதித்தது. இதன் மூலம் அரசுக்கு 225 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. 2022ல் டில்லி போக்குவரத்து கழகத்தில் 223 கோடி ரூபாய் இருந்தும் புதிய பஸ்கள் வாங்க ஆம் ஆத்மி அரசு தவறி விட்டது. சிஎன்ஜி யில் இயங்கும் 1,770 பஸ்கள் அதன் ஆயுட்காலம் முடிந்த பிறகும், வேறு பஸ்கள் மாற்றப்படவில்லை. அதே சமயம் டில்லி மக்களின் நலன் கருதி, மத்திய அரசின் சார்பில் எலக்ட்ரிக் பஸ்கள் வழங்கப்பட்டன. மொத்தத்தில், ஆம் ஆத்மி அரசின் தவறான நிர்வாகம், தவறான நிதி கையாளல், மோசமான கொள்கை முடிவு உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து கழகம் கடும் நஷ்டத்தை சந்தித்ததுடன், மோசமான கடன் சுமைக்கும் ஆளானது என பாஜ அரசு குற்றம் சாட்டியுள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, சுகாதாரம், கலால் துறையில் நடந்த ஊழல்கள் குறித்த சிஏஜி அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது மூன்றாவதாக போக்குவரத்து துறை வரவு செலவுகள் குறித்த சிஏஜி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முந்தைய அரசின் மோசமான செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், டில்லி அரசியலில் சலசலப்பு அதிகரித்துள்ளது.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ