தவெகவுடன் சேர்ந்தால் புதிய கட்சி துவங்க சிதம்பரம் முடிவு? | Congress | DMK | TVK vijay| Chidambaram
2026 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் மேலிடம் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிக சீட் என அக்கட்சி குரல் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்ச செல்வாக்கு கூட இல்லை என்பதால், அக்கட்சி வலியுறுத்தும் கோரிக்கைகளை ஏற்க திமுக மேலிடம் விரும்பவில்லை. தமிழக பாஜவை விட குறைவாக, அதுவும் சொற்ப அளவிலான ஓட்டு வங்கியே காங்கிரசுக்கு இருக்கிறது. அதனால், அக்கட்சியின் உறவுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனாலும், தேசிய அளவில் பாஜவை எதிர்த்து அரசியல் செய்ய காங்கிரஸ் உறவு அவசியம் என்பதால், திமுக தலைமை தயக்கம் காட்டி வருகிறது. இந்த நேரத்தில், தவெக தரப்பில் காங்கிரசுக்கு தொடர் அழைப்பு விடப்பட்டு வருகிறது. அதோடு ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் காட்டிய ஆசை, தமிழக காங்கிரஸ் கோஷ்டியையும், அக்கட்சி மேலிடத்தையும் ஆட்டி படைக்கிறது. அதனால் தவெக தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்து பேசுவதும், திமுக அரசை விமர்சிப்பதுமாக காங்கிரசில் இருப்போர் சிலரின் போக்கு மாறி உள்ளது. அதேநேரம் விஜய் விரிக்கும் வலையில் விழுந்து திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது தற்கொலை முயற்சி என சிதம்பரம் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். விஜயோடு மேடை ஏறி அரசியல் செய்ய அவர்கள் அறவே விரும்பவில்லை. அதனால், காங்கிரஸ் மேலிடம் அதுபோன்ற முடிவு எடுத்தால், சிதம்பரம் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை உருவாகும் என பேசப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட திமுக ஆதரவு தலைவர்களும், சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களோடு அணி சேருவதால், தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைவது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில், புத்தாண்டை ஒட்டி முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது: மத்திய அரசில் 19 ஆண்டுகள் முக்கிய இலாகாக்களின் அமைச்சராக கோலோச்சியவர் சிதம்பரம். தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவரது பதவிக்காலம் வரும் 2027ல் முடிகிறது. மீண்டும் அவர் ராஜ்யசபா எம்பியாக திமுக ஆதரவு தேவை. எனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் விரும்புகிறார். ஒருவேளை, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் முடிவை டில்லி மேலிடம் எடுக்குமானால், சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி உடைய வாய்ப்புள்ளது. கடந்த 2001ல், தமாகாவின் அப்போதைய தலைவர் மூப்பனாரை எதிர்த்து, காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற அமைப்பை சிதம்பரம் துவக்கினார். திமுகவுடன் காங்கிரஸ் ஜனநாயக பேரவை கூட்டணி அமைத்து வள்ளல்பெருமான், ரங்கநாதன் என இரண்டு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சிதம்பரம் உறுதியாக இருக்கிறார். மேலிட தலைவர்களை சந்தித்து பேசி தன் கருத்தை வலியுறுத்த உள்ளார். அதன் பின்பும் காங்கிரஸ் தலைமை விஜயுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருந்தால், தனித்து முடிவெடுக்க சிதம்பரம் திட்டமிட்டுள்ளார் என கூறினர். #Dmk #tvk #congress #p.chidambaram #mkstalin #cmstalin #dmkalliance #tvkalliance #2026election #tnelection #tnpolitics #INC #congressparty #mdmk #vck #tvkvijay #vijaytvk