பயங்கரவாதத்தை முறியடிக்க அரசுடன் நிற்போம்: ராகுல் | Congress full support | Kashmir Issue
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து ஸ்ரீநகர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ள நபரை சந்தித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆறுதல் கூறினார். பின், ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்தார். பின் பேட்டி அளித்த ராகுல், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதை கண்டித்தார். ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். அனைவரும் தேசத்தின் பக்கம் நிற்கின்றனர். பயங்கரவாதத்தை ஒரு போதும் ஏற்க முடியாது. நாட்டின் சகோதரர்களுக்குள் சண்டை மூட்டி விடும் வகையில் இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது என ராகுல் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தருணத்தில், அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.