பயமுறுத்த தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்புகிறது |Election Commission | Prashant Kishor | voter List
தவறு செய்து இருந்தால் என்னை கைது செய்யுங்கள்! 2 மாநிலத்தில் வாக்குரிமை? பிரசாந்த் கிஷோர் கொதிப்பு மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்ட பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர், கடந்த ஆண்டு அக்டோபரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கினார். இந்தாண்டு சில இடைத்தேர்தல்களில் அவருடைய கட்சி போட்டியிட்டு தோல்வியடைந்தது. நவம்பரில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிடுகிறது. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சூழலில், பீகார் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் பிரசாந்த் கிஷோரின் பெயர் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்-1950ன் படி ஒருவருக்கு இரண்டு இடங்களில் ஓட்டுப் பதிவு இருக்க கூடாது. எனவே, 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் கூறும்போது, பீகாரில் எனது சொந்த கிராமத்தில் கர்காஹர் தொகுதியில் 2019 முதல் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. இடையில், 2 ஆண்டுகள் நான் மேற்கு வங்கத்தில் இருந்தேன். அதனால் என் பெயரை அங்கு மாற்றினேன். ஆனால், பீகாரில் என்பெயரை நீக்காமல் தேர்தல் ஆணையம் விட்டு இருக்கிறது. இப்போது, நான் பீகாருக்கே வந்துவிட்டேன். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது, ஏற்கனவே இருந்த என் பெயரே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்னை பயமுறுத்துவதற்காக நோட்டீஸ் அனுப்புகிறது. நான் தவறு செய்திருந்தால் என்னைக் கைது செய்யுங்கள். தவறை நிரூபித்துக் காட்டுங்கள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.