உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தாய், 2 மகன் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்: கண்ணீரில் இஸ்ரேல் | Hamas | Israeli hostages | Israel hamas

தாய், 2 மகன் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்: கண்ணீரில் இஸ்ரேல் | Hamas | Israeli hostages | Israel hamas

சடலமாக திரும்பிய தாய், மகன்கள் சோகத்தில் மூழ்கிய இஸ்ரேல் தேசம் என் இதயம் கிழிந்தது நெதன்யாகு உருக்கம் 2023 அக்டோபர் 7 ம்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து 251 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் போரை துவங்கியது. காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரில் 49 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் இறந்தனர். இதில், பாலஸ்தீனியர்கள் 48 ஆயிரம் பேர். இஸ்ரேலியர் 1700 பேர். இந்த போரில் தினமும் அப்பாவிகள் இறப்பதை கருத்தில் கொண்டு, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் எடுத்த தொடர் முயற்சியால் இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. 3 கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முடிவானது. முதல் கட்ட போர் நிறுத்தத்தின்போது 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டது. பதிலுக்கு இஸ்ரேல் நாட்டு சிறைகளில் உள்ள 1904 பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும். இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்துள்ளனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்த 1133 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. லேட்டஸ்ட் தகவல் படி, காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளனர். இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும்விதமாக, இறந்துபோன 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் இன்று ஒப்படைத்தனர். ஷிரி பிபஸ் என்ற பெண், அவரது மகன்கள் ஏரியல், கிஃபிர் Shiri Bibas Ariel, Kfir மற்றும் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ஓடட் லிப்ஷிட்ஸ்சின் Oded Lifshitz உடல்களை காசாவிலுள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். அவர்கள் 4 உடல்களையும் இஸ்ரேல் ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். 4 உடல்களும் தடயவியல் பரிசோதனைக்காக டெல் அவிவ்நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான இஸ்ரேலியர்கள் வழிநெடுக இஸ்ரேல் கொடிகளை பிடித்துக் கொண்டு கண்ணீருடன் உடல்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்களை பார்த்தபடி நின்றிருந்தனர். பலர் கண்ணீர் விட்டனர். உடல்கள் இஸ்ரேல் வந்து சேரும் முன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, வேதனையுடன் சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். பிணைக்கைதிகள் நால்வரின் உடல்களை கொண்டு வருகிறோம். இது இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு துக்க நாள். இஸ்ரேல் தேசத்தின் இதயம் கிழிந்துள்ளது. என்னுடைய இதயமும் கூட. ஒட்டுமொத்த உலகின் இதயமும் கிழிய வேண்டும். ஏனென்றால் நாம் எப்படிப்பட்ட அரக்கர்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இஸ்ரேல்தேசம் துக்கத்தில் இருக்கிறது. நொறுங்கிப்போயிருக்கிறது. அதேநேரத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என நெதன்யாகு உருக்கமாக கூறியுள்ளார். 2023 அக்டோபர் 7 ம்தேதி தெற்கு இஸ்ரேலில் வீட்டில் சந்தோஷமாக இருந்தபோதுதான், ஷிரி, அவரது கணவர் யார்டன் பிபஸ், 2 மகன்கள் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட போது ஷிரி பிபஸ்க்கு 32 வயது. ஒரு மகனுக்கு 4 வயது. இன்னொரு மகனுக்கு 9 மாதங்கள். யார்டன் பிபசை இம்மாத துவக்கத்தில் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ஓடட் லிப்ஷிட்ஸ்ஸ், Oded Lifshitz அவர் மனைவி யோசெவெட் ஆகியேர் Yocheved 2023 தெற்கு இஸ்ரேலில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து கடத்தப்பட்டனர். மனைவி யோசெவெட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் விடுவித்தது. இறந்த ஓடட்டுக்கு வயது 83. வயது மூப்பால் அவதிப்பட்ட அவர், சரிவர சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறின. ஹமாஸ் கடத்திச் சென்ற பிணைக் கைதிகளில் ஏரியலும், கிஃபிரும்தான் குழந்தைகள். போர் உச்சக்கட்டத்தில் நடந்தபோது, ஹமாஸ் பயங்கரவாதிகள் எந்தளவுக்கு கொடூரமானவர்கள் என்பதை காட்டுவதற்காக இவ்விரு குழந்தைகளின் படத்தை சர்வதேச மீடியாக்கள் பயன்படுத்திக் கொண்டன. இதனால், உலகம் முழுக்க ஏரியல், கிஃபிர் ரொம்ப பிரபலமானார்கள். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஷிரியும், அவரது 2 மகன்களும் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் அமைப்பு கூறியது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதையும் ஹமாஸ் வெளியிடவில்லை. மனைவி, மகன்கள் இறப்புக்கு காரணம் பிரதமர் நெதன்யாகுதான் என ஷிரியின் கணவர் யார்டன் குற்றம்சாட்டினார். ஹமாஸ் பிடியில் இருக்கும் எஞ்சிய பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டு வர இஸ்ரேலும் உலக நாடுகளும் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். 2023 அக்டோபர் 7 ம்தேதி இஸ்ரேலில் புகுந்து கொடூரமாக தாக்கிய ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரை கொன்றனர். அப்போது, துப்பாக்கி முனையில் ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றபோது தன் 2 குழந்தைகளை போர்வையில் மூடியபடி இறுகப்பற்றிக் கொண்டு ஷிரி கதறி அழும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது. ஹமாசின் கொடூர முகத்தை உலகுக்கு விவரிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்திருந்தது. ஷிரியின் குடும்பம் பற்றிய பல உருக்கமான தகவல்களை சர்வதேச மீடியாக்கள் போட்டி போட்டு வெளியிட்டன. பிணைக்கைதிகள் படும் துயரங்களின் அடையாளமாக ஷிரியின் குடும்பத்தை உலக நாடுகள் சித்தரித்து காட்டின. போர் நிறுத்த ஒப்பந்தத்தால் யார்டன் மட்டும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய நிலையில், மனைவி ஷிரியும் 2 மகன்களும் சடலமாக தாயகம் திரும்பியிருப்பது இஸ்ரேல் மக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !