தமிழ்நாட்டு பெண்களின் பொருளாதார சுதந்திரம் எப்படி? - தினமலர் செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
பெண்கள் கடன் வாங்குவதில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள் பட்டியலை கிரிப் ஹைமார்க் நிறுவனம் வெளியிட்டது. இது பற்றிய செய்தி தினமலர் நாளிதழில் கடன் வாங்குவதில் கலங்காத பெண்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதனை முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தலைப்பை பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே. பல்வேறு தொழில் முனைவுகளுக்காக கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டு பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்த செய்தி. பெண்களின் சமூக பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம். அதிலும், தமிழ்நாட்டு பெண்கள் எந்தளவுக்கு பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்த செய்தி; சர்வதேச மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி என்று கூறியுள்ளார்.