பாஜ, இண்டி கூட்டணி இரண்டிலும் இடியாப்ப சிக்கல் Maharashtra election | BJP| Shinde | Shiv Sena| Congr
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பாஜ - சிவசேனா ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணி ஆகியவை ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அதே சமயம், காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் அணி, தேசியவாத காங்கிரசின் சரத் பவார் அணி, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட இண்டி கூட்டணியும் ஆட்சியை பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. ஆனால், இரு தரப்பிலும் இன்னும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாததால், மாநில அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. மாநிலத்தில் பாஜ தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில், 160 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள ஷிண்டேயின் சிவசேனாவுக்கு 70 இடங்களும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 40 இடங்களையும் ஒதுக்க பாஜ திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கினால் கணக்கு சரியாக இருக்கும் என பாஜ தலைமை கருதுகிறது. ஆனாலும் பாஜவின் இந்த கணக்கை ஏற்க ஷிண்டே தரப்பு சிவசேனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மும்பையில் தங்கள் தரப்பு சிவசேனாவுக்கு செல்வாக்கு இருப்பதாகவும், முதல்வராக பதவி வகிப்பவரின் கட்சிக்கு சொற்ப இடங்கள் ஒதுக்குவதை ஏற்க முடியாது என்றும் ஷிண்டே ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.