மகாவில் உடையும் பாஜ கூட்டணி? பரபரப்பு தகவல் Maharashtra political crisis | Eknath Shinde vs Fadnavis
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230ல் பா.ஜ., ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ., மட்டும் 132 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 50க்கும் குறைவான தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை. அதிக தொகுதிகளை வென்றதால், முதல்வர் பதவியை பா.ஜ.,வுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏற்பட்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசியதை அடுத்து, முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க, ஏக்நாத் ஷிண்டே முன்வந்தார். பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்றனர். இரண்டரை ஆண்டு காலம், நம்பர் - 1 இடத்தில் இருந்த ஏக்நாத் ஷிண்டே, நம்பர் - 2 இடத்துக்கு தள்ளப்பட்டதால் அதிருப்தி அடைந்தார். அமைச்சரவையில், உள்துறை இலாகா கிடைக்கும் என எதிர்பார்த்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், அரசு நிகழ்ச்சிகளில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் கருதுகிறார். சமீபத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், மும்பையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷிண்டேவின் அதிருப்திக்கு மேலும் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர். அதாவது, புதிய அமைச்சரவை பதவியேற்ற ஒன்றரை மாதத்துக்கு பின், 36 மாவட்டங்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பு அமைச்சர்களை நியமித்தார். ராய்கட், நாசிக் மாவட்டங்களுக்கு, சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கும்படி, ஏக்நாத் ஷிண்டே கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே உள்துறை கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ஷிண்டே, இதனால் மேலும் கடுப்பானார்.