கூட்டணி கட்சிகளை மாநாட்டில் அம்பலப்படுத்திய முத்தரசன் | Mutharasan | Communist Party | DMK alliance
2019 லோக்சபா தேர்தல் பணிகளுக்காக, இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா 15 கோடி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாய் வழங்கியதாக தேர்தல் கமிஷனில் திமுக தெரிவித்தது.
அப்போது இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எளிமை, நேர்மைக்கு பெயர் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், தேர்தல் செலவுக்கு 25 கோடி வாங்கியது கம்யூனிஸ்ட் தொண்டர்களையே அதிர்ச்சி அடைய வைத்தது.
திமுகவிடம் பணம் வாங்கியது குறித்து இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப் பயணம் சென்று கொண்டிருக்கும் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, உண்டியல் குலுக்கி வசூலித்து கட்சி நடத்திய கம்யூனிஸ்ட்கள்,
இன்று அறிவாலயத்தில் பணம் பெற்று கட்சி நடத்துகின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.
பழனிசாமியின் கருத்துக்கு சேலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் விளக்கம் அளிப்பது போல பேசினார்.
2019 லோக்சபா தேர்தல் செலவுகளுக்கு திமுக பணம் கொடுத்தது.
ஆனால் கையில் பணத்தை கொடுக்கவில்லை; நள்ளிரவில், திரைமறைவில் கொடுக்கவில்லை.
திமுகவின் வங்கி கணக்கிலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.
எங்களுக்கு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் திமுக பணம் கொடுத்தது என பட்டியல் வாசித்து பேசினார்.
இதுவரை மதிமுக, விசி, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு திமுக பணம் கொடுத்த தகவல் வெளியாகாத நிலையில், உண்மையை போட்டு உடைத்து விட்டாரே என திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.