இண்டி கூட்டணியின் நிலை: சிதம்பரம் விரக்தியுடன் சொன்னது Never seen such a strong party |Chidambara
முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் இணைந்து Contesting Democratic Deficit என்ற நூலை எழுதி உள்ளனர். டில்லியில் நடந்த அதன் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: இண்டி கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போதும்கூட இண்டி கூட்டணியை ஒருங்கிணைக்க முடியும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இந்தியா தேர்தல் ஜனநாயகத்தை பின்பற்றினாலும் கூட, பாரதிய ஜனதாவின் ஆதிக்கம் நாட்டை ஒரு கட்சி ஆட்சி போல மாற்றி இருக்கிறது. வரலாற்று ரீதியாகவும், எனது அனுபவத்திலும் சொல்கிறேன். பாரதிய ஜனதாவை போல இவ்வளவு வலிமையாக கட்டமைக்கப்பட்ட எந்த அரசியல் கட்சியையும் நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு துறையிலும் அது வலிமையாக இருக்கிறது. அது வழக்கமான அரசியல் கட்சி என சொல்ல முடியாது. பாஜ ஒரு எந்திரம். அதன் பின்னால் இன்னொரு எந்திரம் உள்ளது. இந்தியாவில் அனைத்து எந்திரங்களையும் இந்த இரண்டு எந்திரங்கள் கட்டுப்படுத்துகின்றன. அவர்களால் தேர்தல் ஆணையம் முதல் போலீஸ் நிலையம் வரை அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முடிகிறது. சில சமயங்களில் அவற்றை கைப்பற்றவும் முடிகிறது. 2029 பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்து நாம் அனைத்து முனைகளிலும் போராட வேண்டி இருக்கும் என சிதம்பரம் கூறினார். சிதம்பரம் பேசிய இந்த வீடியோவை பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்டு, ராகுலுக்கு மிக நெருக்கமாக இருக்கும் தலைவர்களுக்கு கூட, வரும் காலத்தில் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது தெரிந்திருக்கிறது என கூறி உள்ளார்.