காலை வாரிய 20 பாஜ எம்பிக்கள்-பரபரப்பு பின்னணி |One Nation One Poll | Nitin Gadkari | BJP 3 line whip
பாஜ தலைமையிலான மத்திய அரசு நேற்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, சபையில் மட்டும் இன்றி நாடு தழுவிய அளவில் பரபரப்பான வாதங்களுக்கு வித்திட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள மசோதா, லோக் சபாவில் தாக்கல் ஆன போது மூத்த அமைச்சர் நிதின் கட்கரி உட்பட 20 பாஜ எம்பிக்கள் சபைக்கு வராததும், ஓட்டெடுப்பை புறக்கணித்ததும் பாஜ தலைமைக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் அறிமுகம் செய்தார். மசோதா மீதான அறிமுக விவாதம் காரசாரமாக 90 நிமிடம் நடந்தது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் மசோதாவை கடுமையாக எதிர்த்தன. திமுக எம்பி பாலு கோரிக்கையை ஏற்று மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொண்டது. மசோதா அறிமுகம் தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் ஓட்டுப்போட்டனர். 198 பேர் எதிர்த்து ஓட்டுப்போட்டனர். மசோதா அறிமுகம் வெற்றி பெற ஓட்டெடுப்பில் சாதாரண மெஜாரிட்டி இருந்தாலே போதும். அந்த வகையில் ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றுள்ளது. பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் பார்லிமென்ட்டில் மசோதா தாக்கல் செய்யப்படும். அப்போது நடக்கும் ஓட்டெடுப்பில் மூன்றில் 2 பங்கு ஓட்டு மசோதாவுக்கு ஆதரவாக கிடைக்க வேண்டும். இல்லை என்றால் மசோதா தோல்வி அடையும். எனவே தான் அடுத்த ஓட்டெடுப்பு எப்படி இருக்க போகுதோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இப்படியொரு இக்கட்டான நேரத்தில் சபைக்கு வராமல் புறக்கணித்த நிதின் கட்கரி உட்பட பாஜவின் 20 எம்பிக்களுக்கு விளக்கம் கேட்க பாஜ தலைமை செய்துள்ளது. மசோதா தாக்கலுக்கு முன்பே இது பற்றி கட்சி எம்பிக்கள் அனைவருக்கும் Three line whip என்னும் உத்தரவை பாஜ தலைமை பிறப்பித்து இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கலின் போது இது போன்ற உத்தரவை கட்சி தலைமைகள் பிறப்பிப்பது வழக்கம். இந்த உத்தரவு பிறப்பித்தால் சம்மந்தப்பட்ட கட்சியின் விருப்பப்படி, அதன் அனைத்து எம்பிக்களும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். அதன்படி பாஜ எம்பிக்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இருக்க வேண்டும். ஆனால் நிதின் கட்கரி உட்பட 20 பாஜ எம்பிக்கள் அந்த உத்தரவை மீறிவிட்டனர். சபைக்கும் வரவில்லை; ஓட்டெடுப்பிலும் பங்கேற்கவில்லை. கட்சி உத்தரவை மீறியதால் அவர்களிடம் உறுதியாக விளக்கம் கேட்கப்படும் என்று பாஜ வட்டாரம் கூறியது. இப்போது நடந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தது போல் அடுத்து வரப்போகும் ஓட்டெடுப்பை பாஜ எம்பிக்கள் புறக்கணித்தால் அது மிகப்பெரிய அடியை பாஜவுக்கு கொண்டு வந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.