காரில் ஏற முயன்றபோது செல்லூர் ராஜூவை இபிஸ் தடுத்தது ஏன்? palanisamy| eps| sellur raju
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்துக்கு கடந்த 30ம் தேதி சென்றார். முன்னதாக, காரில் வந்த பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். அப்போது, தமது காரில் செல்லூர் ராஜூவை பழனிசாமி ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், பழனிசாமியை வரவேற்க செல்லூர் ராஜூ, அவருடனே செல்வதற்காக காரின் பின் சீட்டில் ஏற கதவை திறக்கிறார். உடனே பழனிசாமி, அண்ணே வேண்டாம் வேற வண்டில வாங்க என்று சொல்கிறார். அவரும் கார் கதவை சாத்திவிட்டு வேறு வண்டிக்கு செல்கிறார். அதிருப்தியின் காரணமாகவே ராஜூவை பழனிசாமி காரில் ஏற்றவில்லை என கூறப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றதாக செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு இசட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பழனிசாமி காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் தான், வேறு காரில் வரச்சொன்னதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.