வங்கதேச தலைவருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் PM Modi |message |Bangladesh Leader|
தாய்லாந்துக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, பாங்காக்கில் நடந்த பிம்ஸ்டெக் BIMSTEC உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். மாநாட்டில் பங்கேற்க வந்த வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், பிரதமர் மோடியை சந்தித்தார்.. இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினர். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியது. ஜனநாயகம், அமைதி தவழ வங்கதேசத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவு தரும் என பிரதமர் மோடி, முகமது யூனுஸிடம் மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார். இரு நாடுகளின் நீண்டகால ஒத்துழைப்பால் மக்களுக்கு நிறைய நன்மை கிடைத்திருக்கிறது. அதே நோக்கத்துக்காக வங்கதேசத்துடன் இந்தியா ஆக்கப்பூர்வ உறவை தொடர விரும்புகிறது என பிரதமர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கான உறவில் இப்போது இருக்கும் நிலையை கெடுக்கும் வகையில் கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ, சட்ட விரோத ஊடுருவல்களை தடுத்திட நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி முகமது யூனுஸிடம் கூறினார். வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் கவலையை யூனுசிடம் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கவும் மோடி வலியுறுத்தினார் என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.