தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்க்க கூடாது | Ramadoss | Founder | PMK | Mekedatu dam | DMK Govt
சட்டவிரோதமாக நடந்து முடிந்த மேகதாது அணை ஆயத்தப்பணி கர்நாடக அரசின் துணிச்சல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதை தடுக்காமல் மத்திய அரசும், தமிழக அரசும் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டுவதால் மூழ்கும் நிலங்களை அடையாளம் காணும் பணியும், பாதிக்கப்படும் மரங்களை எண்ணும் பணியும் நடப்பதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா சட்டசபையில் தெரிவித்திருந்தார். இப்போது அந்த பணிகளும் முடிந்து விட்டதாக சொல்கிறது கர்நாடகா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது அணையை கட்ட முடியாது. அப்படி இருக்கும்போது மேகதாது அணைக்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வதே சட்டவிரோதம். 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகா தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை பாலைவனமாகிவிடும். தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் கர்நாடக அரசு துணிச்சல் பெற்று, மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்திருக்கிறது. இதற்கு பிறகும் கர்நாடாவின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018ல் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி. இன்னொருபுறம் மேகதாது அணை திட்டத்தை கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வைத்துக் கொள்ளக் கூடாது. லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வரும் 22ம் தேதி சென்னையில் தமிழக அரசு கூட்டியுள்ள 7 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு விடுத்துள்ள அழைப்பை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.